Monday 16 May 2011

முதல்வராகப் பதவியேற்றார் ஜெயலலிதா

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார். இதைக் காண ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் சென்னையில் திரண்டனர்.
இந்த பதவியேற்பு விழாவில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள தவிர குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் பங்கேற்றனர்.

சட்டசபைத் தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்று 147 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகள் நேற்று வேகம் பிடித்தன.

முதலில் அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் ராயப்பேட்டையி்ல் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடந்தது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுதொடர்பான தீர்மான முடிவை கட்சிப் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவை சந்தித்துக் கொடுத்தார். பின்னர் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையனுடன் ஆளுநர் மாளிகை சென்றார் ஜெயலலிதா.

அங்கு ஆளுநர் பர்னாலாவை சந்தித்து இக்கடிதத்தைக் கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். கடிதத்தை ஏற்றுக் கொண்ட பர்னாலா ஆட்சியமைக்குமாறு ஜெயலலிதாவைக் கேட்டுக் கொண்டார்.

ஆளுநரைச் சந்தித்தபோது அமைச்சரவைப் பட்டியலையும் ஜெயலலிதா வழங்கினார். அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து நேற்று இரவு அமைச்சர்கள் பட்டியல் வெளியானது.

இதையடுத்து இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. இன்று பிற்பகல் 12.45 மணியளவில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர்.

.விஜய்காந்த் வந்தார்:

ஜெயலலிதா முதல்வர் பதவியேற்பதைக் காண அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ செயலாளர் தா.பாண்டியன், மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி உள்ளிட்ட தமிழக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

இவர்கள் தவிர சிபிஐ பொதுச் செயலாளர் பரதன், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனதா தள் தலைவர் அஜீத் சிங் ஆகியோரும் பங்கேற்றனர்.

சசிகலா-சோ பங்கேற்பு:


அதே போல ஜெயலலிதாவின் தோழி சசிகலா, துக்ளக் சோ, முன்னாள் டிஜிபி தேவாரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

விழாவில் மிக உற்சாகமாகக் காணப்பட்ட சோ, விஜய்காந்த் வந்தவுடன் ஓடோடிச் சென்று வரவேற்றேதோடு அவரை நரேந்திர மோடிக்கு சிறப்பு அறிமுகமும் செய்து வைத்தார்.

நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவோடு வந்திருந்தார்.

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்பதைப் பொதுமக்களும் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்காக பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு வெளியே பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. அங்கு ஏராளமான டிஜிட்டல் டிவிக்கள் வைக்கப்பட்டிருந்தன. அதேபோல பல்கலைக்கழகப் பகுதி மற்றும் மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை ஆகிய இடங்களில் பெரிய சைஸ் டிஜிட்டல் டிவியும் வைக்கப்பட்டிருந்தது.

முதல்வராகப் பொறுப்பேற்கும் ஜெயலலிதா 12.30 மணிக்கு விழா மேடைக்கு வந்தார். அனைவரும் ஆளுநர் பர்னலாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர். அவர் 12.40 மணிக்கு மேடைக்கு வந்தார். அவர் வந்தவுடன் தனது அமைச்சர்களை ஆளுநருக்கு ஜெயலலிதா அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதையடுத்து ஜெயலலிதாவுக்கு பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். தமிழில், கடவுளின் பெயரால் ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார்.

ஜெயலலிதாவைத் தொடர்ந்து நிதியமைச்சராக ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன், மின்துறை அமைச்சராக நத்தம் ஆர்.விஸ்வநாதன், உள்ளாட்சித்துறை அமைச்சராக கே.பி.முனுசாமி, தொழில்துறை அமைச்சராக சி.சண்முகவேலு, வீட்டு வசதித்துறை அமைச்சராக ஆர்.வைத்திலிங்கம், உணவுத்துறை அமைச்சராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்றனர்.

'ஓவர் ஸ்பீடு' கருப்பசாமி:

அடு்த்ததாக கால்நடைத்துறை அமைச்சராக கருப்பசாமி படுவேகமாக ஓடி வந்து, அதே வேகத்தில் படு வேகத்தில் பதவிப் பிரமாணத்தை எடுத்துக் கொண்டு, ஆளுநரின் கையை மிக வேகமாகப் பிடித்து குலுக்கிவிட்டு, படு ஸ்பீடாக திரும்பி வந்து ஜெயலலிதாவுக்கு கும்பிடு போட்டுவிட்டுச் செல்ல, அவரது வேகத்தைப் பார்த்து ஜெயலலிதா விழுந்து விழுந்து சிரித்தார். கூட்டத்தில் இருந்த அனைவருமே சிரிப்பில் ஆழ்ந்தனர்.

முதல் கையெழுத்து:

முதல்வர் பதவியை ஏற்றதும் புனித ஜார்ஜ் கோட்டைக்குச் செல்கிறார் ஜெயலலிதா. அங்கு முதல் கையெழுத்திடுகிறார். அவர் முதலில் உத்தரவிடப்போகும் திட்டம் எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட உறுதி மொழி ஒன்றை நிறைவேற்றுவது தொடர்பான உத்தரவாக அது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் விழாக் கோலம்

3வது முறையாக ஜெயலலிதா முதல்வர் பதவியேற்பதையொட்டியும், அதிமுக அமைச்சரவை பதவியேற்கவுள்ளதையொட்டியும் சென்னை நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளனர். அதிமுகவினர் சாரை சாரையாக சென்னைக்கு விரைந்துள்ளனர். கடற்கரையிலும் காலையிலேயே கூட்டம் திரண்டு வந்து கொண்டிருக்கிறது.நன்றி: தட்ஸ்தமிழ் 

No comments:

Post a Comment

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...