Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, 10 November 2011

கோட்டுர்புர நூலகத்தை மருத்துவமனையாக மாற்றி அமைக்க ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு ஒரு கடிதம்...


என்னடா இவனும் கடிதம் எழுத வந்துட்டான்னு நினைக்கிறீங்களா ? நான் எப்பவோ முதல்வருக்கு எழுத நினைத்தேன்.  ஆனால் நிறைய பேர் என் மனதில் பட்டதை எழுதியதால் கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டேன். 

ஆனால் இந்த கடிதம் (அ) கட்டுரை (அ) ஆதங்கம் எதற்கு என்றால் தலைப்பிலேயே தெரிந்து விடும். சரி, கடிதம் எழுதிட்டு வரேன்....

அன்பின் ஆதரவாளர்களே, 

வணக்கம். சமீப காலமாக நடக்கும் கோட்டுர்புர நூலக பிரச்சனையை கூர்ந்து கவனித்து வருகிறேன்.  அதில் அறிக்கை வெளியிட்ட முதல்வர் , இத்திட்டத்திருக்கு  எதிர்ப்பு தெரிவிப்பவரை விட ஆதரவாளரான உங்கள் முழக்கம் தான் பெரிதும் இரைச்சலாய் இருக்கிறது. 


ஆதரவாளரான உங்களை வகையிட்டு பார்த்தல், குழந்தைகள் மருத்துவமனை தான் தேவை என்பவர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஊழலின் ஒரு மிகப்பெரிய அடையாளச் சின்னம், 200 கோடியை வைத்து மாவட்டங்கள் தோறும் நூலகங்களை மேம்படுத்தி இருந்தால் , ஒட்டு மொத்த தமிழகமுமே பயன்படுத்தி இருக்குமே என்று குரல் கொடுப்பவரை கண்டால் தான் கோபம் தலைக்கேறுகிறது. 

ஏங்க எங்கதாங்க ஊழல் இல்ல? இவ்வளவு சதுர அடிக்கு இவ்வவளவு ருபாய் , புத்தகங்கள் இவ்வளவு ரூபாய்னு  கணக்கு போடுறீங்களே இது மாதிரி அரசு கட்டடம் பாலங்கள் உட்பட எல்லாத்துக்கும் உக்காந்து கணக்கு போட்டு பாருங்க.  அதெல்லாம் செய்யதவங்க இதுக்கு மட்டும் எதுக்குங்க குரல் குடுக்குறீங்க. எல்லாமே தமிழக மக்களின் பணம் தான். அதையும் கொஞ்சம் யோசிங்க. ஊழல் இல்லாத அரசாங்கமே உலகில் இல்லை. நாளைக்கு நீங்களும் நானும் அந்த இடத்தில இருந்தால் விட்டதை வட்டியும் முதலுமாய் சம்பாதிக்கதான் செய்வோம். ஊழல் தான் விஷயம் என்றால், நீங்க ஆதரித்து பேசுவதே தேவையற்ற ஒரு செயல். 

அடுத்து, இந்த நூலகம் சென்னையின் மையப்பகுதியில் இல்லை புத்தகங்களை எழும்பூருக்கு மாற்றுவது தான் சரின்னு குரல் விடுறீங்களே நீங்க பேசுறதும் தேவையற்ற ஒரு விஷயம்.  சென்னையில்தான் பல multiplex  இருக்கு, ஷாப்பிங் மால் இருக்கு, KFC இருக்கு, அது இருக்கு , இது இருக்கு மார் தட்டுகிறீர்களே அதே மாதிரி சென்னையில் தான் World Class Library இருக்குனு மார் தட்டுங்க. நீங்க படிக்கிறீங்களோ இல்லையோ யாராவது ஒருத்தராவது அங்க படிக்கதான் செய்றாங்க.  

 200 கோடியை வைத்து மாவட்டங்கள் தோறும் நூலகங்களை மேம்படுத்தி இருந்தால் , ஒட்டு மொத்த தமிழகமுமே பயன்படுத்தி இருக்குமேன்னு சொல்றீங்களே இது நியாயமற்ற  ஒரு சிந்தனை...எது எதுக்கோ போராட்டம், புரட்சின்னு அலைபவர்கள் இதே மாதிரி எல்லா மாவட்டத்திலும் வேணும்னு கொடி பிடிங்க. உங்க காசுதானங்க அது.  இந்த 200 கோடிதான் உங்க பணமா? கட்டிடம் கட்டி தர அரசாங்கத்திடம் நிதி இல்லையா, இடம் இல்லையா ? கேளுங்க எல்லா மாவட்ட காரங்களும் எங்களுக்கு இப்படி ஒரு நூலகம் வேண்டும்னு. அத விட்டுட்டு நா புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு இருந்தா ஒன்னும் பண்ண முடியாது.

மருத்துவமனை  வருவது தான் நல்லதுன்னு நினைக்கின்றவருகளுக்கு என் தாழ்ந்த வேண்டுகோள்.  இது மருத்துவமனைக்கு ஏற்ற கட்டிடமே இல்லை. நம் முதல்வரே வாய் விட்டு கூறியதால், தொடர்ந்து சென்னையில் ஒரு புதிய குழந்தைகள் மருத்துவமனை கட்டி தர சொல்லி கேட்போம். போராட்டம் பண்ணுவோம்.

என்னை பொருத்தவரைக்கும், இந்தியாவிற்கு தாஜ் மஹால் எப்படியோ, அதே போல் சென்னைக்கு அண்ணா லைப்ரரி.


யோசியுங்கள் ஆதரவாளர்களே ! நன்றி. வணக்கம். 



Tuesday, 6 September 2011

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ. 2 கோடி பரிசு - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சட்டசபையில் தன் சொத்து மதிப்பு 51 கோடி என்று தடாலடியாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, மேலும் ஒரு தடாலடி அறிவிப்பு செய்துள்ளார். 


Tuesday, 23 August 2011

இனி சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு


Wednesday, 27 July 2011

இவங்கெல்லாம் வெளிநாட்டு அரசியல் தலைவர்களாம் !!!!!


Wednesday, 29 June 2011

!!!!!ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கி கணக்கு !!!!!


Monday, 20 June 2011

கலைஞரின் " எவண்டி உன்ன பெத்தான்"


கலைஞரின் " எவண்டி உன்ன பெத்தான்"  
(உபயம் : இணையத்தளம்)
கலைஞர், சமீபத்தில் அம்மாவால் ஏற்பட்ட மன உளைச்சல்களை கொட்டி சிம்புவோட பாடலுக்கு தானே வரி எழுதி பாடுகிறார். நீங்களும் அதே டியுனில் பாடவும். 

Friday, 17 June 2011

கல்வியை வியாபாரமாக்கக் கூடாது-சரத்குமார் பேச்சு

கல்வி முற்றிலும இவலசமாக்கப்பட வேண்டும். அதை வியாபாரமாக்கக் கூடாது என்று தென்காசியில் சரத்குமார் எம்எல்ஏ பேசினார். 



Thursday, 16 June 2011

கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினி நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசினார். தான் பூரண நலமடைந்துவிட்டதாக தெரிவித்த அவருக்கு, கருணாநிதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.


Monday, 16 May 2011

முதல்வராகப் பதவியேற்றார் ஜெயலலிதா

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார். இதைக் காண ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் சென்னையில் திரண்டனர்.




இந்த பதவியேற்பு விழாவில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள தவிர குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் பங்கேற்றனர்.

சட்டசபைத் தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்று 147 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகள் நேற்று வேகம் பிடித்தன.

முதலில் அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் ராயப்பேட்டையி்ல் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடந்தது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுதொடர்பான தீர்மான முடிவை கட்சிப் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவை சந்தித்துக் கொடுத்தார். பின்னர் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையனுடன் ஆளுநர் மாளிகை சென்றார் ஜெயலலிதா.

அங்கு ஆளுநர் பர்னாலாவை சந்தித்து இக்கடிதத்தைக் கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். கடிதத்தை ஏற்றுக் கொண்ட பர்னாலா ஆட்சியமைக்குமாறு ஜெயலலிதாவைக் கேட்டுக் கொண்டார்.

ஆளுநரைச் சந்தித்தபோது அமைச்சரவைப் பட்டியலையும் ஜெயலலிதா வழங்கினார். அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து நேற்று இரவு அமைச்சர்கள் பட்டியல் வெளியானது.

இதையடுத்து இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. இன்று பிற்பகல் 12.45 மணியளவில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர்.

.விஜய்காந்த் வந்தார்:

ஜெயலலிதா முதல்வர் பதவியேற்பதைக் காண அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ செயலாளர் தா.பாண்டியன், மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி உள்ளிட்ட தமிழக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

இவர்கள் தவிர சிபிஐ பொதுச் செயலாளர் பரதன், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனதா தள் தலைவர் அஜீத் சிங் ஆகியோரும் பங்கேற்றனர்.

சசிகலா-சோ பங்கேற்பு:


அதே போல ஜெயலலிதாவின் தோழி சசிகலா, துக்ளக் சோ, முன்னாள் டிஜிபி தேவாரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

விழாவில் மிக உற்சாகமாகக் காணப்பட்ட சோ, விஜய்காந்த் வந்தவுடன் ஓடோடிச் சென்று வரவேற்றேதோடு அவரை நரேந்திர மோடிக்கு சிறப்பு அறிமுகமும் செய்து வைத்தார்.

நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவோடு வந்திருந்தார்.

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்பதைப் பொதுமக்களும் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்காக பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு வெளியே பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. அங்கு ஏராளமான டிஜிட்டல் டிவிக்கள் வைக்கப்பட்டிருந்தன. அதேபோல பல்கலைக்கழகப் பகுதி மற்றும் மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை ஆகிய இடங்களில் பெரிய சைஸ் டிஜிட்டல் டிவியும் வைக்கப்பட்டிருந்தது.

முதல்வராகப் பொறுப்பேற்கும் ஜெயலலிதா 12.30 மணிக்கு விழா மேடைக்கு வந்தார். அனைவரும் ஆளுநர் பர்னலாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர். அவர் 12.40 மணிக்கு மேடைக்கு வந்தார். அவர் வந்தவுடன் தனது அமைச்சர்களை ஆளுநருக்கு ஜெயலலிதா அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதையடுத்து ஜெயலலிதாவுக்கு பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். தமிழில், கடவுளின் பெயரால் ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார்.

ஜெயலலிதாவைத் தொடர்ந்து நிதியமைச்சராக ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன், மின்துறை அமைச்சராக நத்தம் ஆர்.விஸ்வநாதன், உள்ளாட்சித்துறை அமைச்சராக கே.பி.முனுசாமி, தொழில்துறை அமைச்சராக சி.சண்முகவேலு, வீட்டு வசதித்துறை அமைச்சராக ஆர்.வைத்திலிங்கம், உணவுத்துறை அமைச்சராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்றனர்.

'ஓவர் ஸ்பீடு' கருப்பசாமி:

அடு்த்ததாக கால்நடைத்துறை அமைச்சராக கருப்பசாமி படுவேகமாக ஓடி வந்து, அதே வேகத்தில் படு வேகத்தில் பதவிப் பிரமாணத்தை எடுத்துக் கொண்டு, ஆளுநரின் கையை மிக வேகமாகப் பிடித்து குலுக்கிவிட்டு, படு ஸ்பீடாக திரும்பி வந்து ஜெயலலிதாவுக்கு கும்பிடு போட்டுவிட்டுச் செல்ல, அவரது வேகத்தைப் பார்த்து ஜெயலலிதா விழுந்து விழுந்து சிரித்தார். கூட்டத்தில் இருந்த அனைவருமே சிரிப்பில் ஆழ்ந்தனர்.

முதல் கையெழுத்து:

முதல்வர் பதவியை ஏற்றதும் புனித ஜார்ஜ் கோட்டைக்குச் செல்கிறார் ஜெயலலிதா. அங்கு முதல் கையெழுத்திடுகிறார். அவர் முதலில் உத்தரவிடப்போகும் திட்டம் எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட உறுதி மொழி ஒன்றை நிறைவேற்றுவது தொடர்பான உத்தரவாக அது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் விழாக் கோலம்

3வது முறையாக ஜெயலலிதா முதல்வர் பதவியேற்பதையொட்டியும், அதிமுக அமைச்சரவை பதவியேற்கவுள்ளதையொட்டியும் சென்னை நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளனர். அதிமுகவினர் சாரை சாரையாக சென்னைக்கு விரைந்துள்ளனர். கடற்கரையிலும் காலையிலேயே கூட்டம் திரண்டு வந்து கொண்டிருக்கிறது.



நன்றி: தட்ஸ்தமிழ் 

Wednesday, 20 April 2011

மே 13ல் ஓட்டு எண்ணிக்கை: 17ம் தேதி ஆட்சி- கால அவகாசம் இல்லாததால் கட்சிகள் தவிப்பு

தமிழக சட்டசபைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்குப் பின் புதிய அரசு பதவியேற்க வெறும் 4 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால், அதற்குள் ஆட்சி அமைத்துவிட முடியுமா என்ற குழப்பத்திலும் கவலையிலும் திமுக, அதிமுக ஆகியவை ஆழ்ந்துள்ளன.


2006ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு 17-5-2006ம் தேதி காலை 9.30 மணிக்கு 13வது சட்டசபை கூடியது. உடனே புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்.


அரசியல் சட்ட விதிகளின்படி தமிழகத்தின் 14வது சட்டசபை 17-5-2011ம் தேதி காலை 9.30 மணிக்குள் கூடி புதிய எம்.எல்.ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அதற்கு முன்பாக தற்காலிக சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

முன்னதாக இப்போது ஆட்சியில் உள்ள அரசு தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்க வேண்டும். அதன் பின்னர் அவர் வென்ற கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்.

இதையடுத்து தேர்தலில் வென்ற கட்சியின் அமைச்சரவை பதவி ஏற்க வேண்டும். கூட்டணி ஆட்சியாக இருந்தால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்கள் ஆளுநரிடம் தரப்பட வேண்டும்.

இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பதற்கான தகவல்கள் முறைப்படி அனுப்பப்பட்டு அனைவரும் சென்னைக்கு வரவேண்டும். யாராவது பதவி ஏற்க வரமுடியாத சூழ்நிலை இருந்தால் அவரது பதவியை முடக்கி வைப்பது குறித்து கவர்னர் முடிவு எடுக்கலாம். இதற்கெல்லாமே மொத்தமே 4 நாள் தான் அவகாசம் உள்ளது.

கூட்டணி ஆட்சி அமையலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையி்ல் திமுகவோ அல்லது அதிமுகவோ தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவது குறித்து பேசி முடிவெடுக்க வேண்டும். சில கட்சிகள் பதவிக்காக கூட்டணி மாறக் கூட வாய்ப்புள்ளது. துணை முதல்வர், அமைச்சர் பதவிகள் என மோதல்கள் ஏற்பட்டால் உடனே இதில் தீர்வு கண்டு அரசை அமைத்துவிட முடியாது. இதற்கு கால அவகாசம் தேவைப்படும்.

ஆனால், தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 13ம் தேதி முடிவடைந்தது. அடுத்த மாதம் 13ம் தேதி தான் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. மின்னணு எந்திர வாக்குப்பதிவு என்பதால் 13ம் தேதி மாலைக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகி விடும்.

என்றாலும் அமைச்சரவை பதவி ஏற்பு, சட்டசபை கூடுதல், துணை சபாநாயகர் தேர்வு, எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு ஆகியவற்றுக்கான கால அவகாசம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் கட்சிகள் தவிப்பில் உள்ளன.

தேர்தல் முடிவை அறிய ஒரு மாத அவகாசம் கொடுத்த தேர்தல் ஆணையம், அமைச்சரவை, சட்டசபை கூட்டம், எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பு போன்ற முக்கிய அரசியல் நடவடிக்கைகளுக்கு போதுமான கால அவகாசம் கொடுக்கவில்லை.

திமுகவோ, அதிமுகவோ எந்தக் கட்சியாக இருந்தாலும், தனித்து ஆட்சி அமைக்க 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 119 இடங்களில் போட்டியிட்டுள்ள திமுக தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை.

கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கான இடங்களைப் பெற்றாலும், யார், யாருக்கு அமைச்சர் பதவி, யார் யாருக்கு எந்தெந்த துறை என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டிய நிலை உருவாகும். இதையெல்லாம் ஆலோசித்து முடிவு எடுக்க கால அவகாசம் இல்லை.

அதிமுகவைப் பொறுத்தவரை 160 இடங்களில் போட்டியிட்டுள்ளது. தனித்து பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றால் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓரிரு நாளில் அதிமுக அரசு பதவியேற்கலாம். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை ஏற்பட்டால் அதிமுகவுக்கும் கால அவகாசம் தேவை.

தேமுதிக என்ற யானையை கட்டுப்படுத்தி ஆட்சிக் கட்டிலில் ஏறுவது அதிமுகவுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.

இது, தமிழகத்தில் இதுவரை இல்லாத புது அனுபவம் ஆகும்.

எந்தக் கூட்டணி அதிக இடங்களை பெறுகிறதோ அந்தக் கூட்டணி பெரும்பான்மையை காட்டும் வகையில் எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை, கவர்னரிடம் அளிக்க வேண்டும். அவர் திருப்தியடைந்தால், அந்த கூட்டணியின் தலைமையை ஆட்சி அமைக்க அழைப்பார். ஆனால், ஆதரவு கடிதம் தருவதில் சிக்கல் ஏற்பட்டால், எந்தக் கட்சி தனித்து அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதோ அக்கட்சியை ஆட்சி அமைக்க அழைத்து, குறிப்பிட்ட நாட்களுக்குள் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டுமென கெடு விதிப்பார்.

இதனால் கட்சிகள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதோடு நிம்மதியின்றி தவித்து வருகின்றன என்பதே நிஜம்.

Thursday, 7 April 2011

மதுரையில் முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

மதுரையில் முகாமிட்டுள்ள முதல்வர் கருணாநிதி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும்:

கேள்வி: தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

கருணாநிதி: மிக துல்லியமாக உள்ளது. பெரும்பான்மையான இடங்களில் எங்கள் அணி வெற்றி பெறும்.

கேள்வி: தி.முக. கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு தருவது ஏன்?

கருணாநிதி: கழக அரசின் சாதனைகள். குறிப்பாக தமிழகத்தில் ஏழைகள் குடிசைகள் இருக்கக்கூடாது என்று திட்டமிட்டு அறிவித்து 20 லட்சம் குடிசைகளை அகற்றி அவற்றுக்கு பதிலாக காங்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் கொண்டுவரப்பட்டன. அந்த திட்டத்தின்படி இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் காங்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளையும் கழக ஆட்சி மீண்டும் வந்தால்தான் கட்டி முடிப்பார்கள் என்ற எண்ணம் ஏழை எளிய மக்களிடம் இருப்பதுதான் ஒரு காரணம்.

கேள்வி: சட்டசபை தேர்தலில் மின் பற்றாக்குறையை ஒரு காரணமாக வைத்து எதிர்க் கட்சிகள் பிரசாரம் செய்து வருகிறதே?

கருணாநிதி: மின் பற்றாக்குறை என்பது தொடர்கின்ற நிகழ்வு. தொழிற்சாலைகள், வீட்டு பயனாளிகளுக்கு தேவைப்படுகின்ற மின் சாரத்தை உற்பத்தி செய்ய முற்படும்போது மேலும் சில தொழிற்சாலைகள் வரத் தொடங்குகின்றன. தொழிற்சாலைகள் வளர, வளர மின்தேவையும் அதிகப்படுகின்றது. அதற்கேற்ப மின் உற்பத்தி செய்யப்பட வேண்டும். இடையில் அ.தி.முக. அரசு தமிழகத்தை ஆளும் நிலை ஏற்பட்டபோது மின்உற்பத்தியில் கவனம் செலுத்தவில்லை. அவர்கள் செய்த தவறு எங்கள் தலையில் விழுந்துள்ளது.

மின் உற்பத்திக்கான திட்டங்கள் கழக ஆட்சியில் தயாரிக்கப்பட்டு தற்போது நல்ல முறைக்கு வரும் நிலை உருவாகி உள்ளது. மீண்டும் தி.மு.க. ஆட்சி வந்தால் அந்த திட்டங்கள் வரிசையாக நிறைவேறும் போது மின் தட்டுப்பாடு அறவே அகற்றப்படும்.

கேள்வி: ம.தி.மு.க.வில் 2-ம் கட்ட தலைவர்கள் தி.மு.க. வுக்கு ஆதரவாக பேசி வருகிறார்களே? ம.தி.மு.க. தொண்டர்களுக்கு நீங்கள் என்ன கூறு விரும்புகிறீர்கள்?

கருணாநிதி: பல இடங்களில் ம.தி. மு.க. தொண்டர்கள் தி.மு.க. வுக்கு தங்களது ஆதரவை மானசீக ஆதரவை தருவதாக நானும் அறிகிறேன். திராவிட இயக்கங்கள் ஒன்றாக இருந்து உறுதிபட தனது கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும். இடையே ஏற்பட்ட சில மாறுபாடுகளால் ஒற்றுமை குலைந்து மாற்றாருக்கு இடம் தருவதாக ஆகிவிட்டது.

ஒன்றுபட்ட திராவிட இயக்கத்தை காணுகிற சூழல் விரைவில் வரும். அதன் அடையாளம் தான் ம.தி. மு.க.வினர் இந்த தேர்தலில் பல இடங்களில் எங்களை ஆதரிக்கிறார்கள்.

கேள்வி: தமிழ்நாட்டை மீட்டெடுப்பேன் என்று கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசி உள்ளாரோ?

கருணாநிதி: அவர் முதலில் பெங்களூர் நீதிமன்றத்தில் உள்ள வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதற்கு அடையாளமாக இருக்கும் நகைகளை முதலில் மீட்கட்டும்.

கேள்வி: தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு எதிராக கெடுபிடி செய்வதாக புகார் எழுந்துள்ளதே?

கருணாநிதி: தேர்தல் ஆணையம் என்பது தன்னை அரசியல் கட்சியின் அங்கமாக ஆக்கிக்கொள்ளலாமல் நடுநிலையாக பணிபுரிய வேண்டிய ஆணையம். நீதிமன்றத்தைப்போல அந்த ஆணையத்தை அவர்கள் நடத்த வேண்டும். ஆனால் நீதிமன்றங்களே சில நேரங்களில் தடுமாறுகிறதை காணும் போது தேர்தல் ஆணையம் இது போன்ற விமர்சனங்களை எதிர்கொள்ளும் நிலை வராமல் பார்த்துக்கொள்வது நல்லது.

தேர்தல் ஆணையம் எவ்வளவு கண்டிப்பாக உள்ளது என்பதற்கு ஒரு உதாரணம். கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மற்ற மாநிலங்களை போல தமிழக அரசும் ரூ.4 கோடி அளவுக்கு பரிசுகள் அறிவித்தது. இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதியை நாங்கள் பெற்றுள்ளோம். கிரிக்கெட் வீரர்களுக்கோ, கிரிக்கெட் சங்கத்திற்கோ முதல்-அமைச்சர் வெகுமதியை வழங்குவதை போல படம் எடுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது.


கேள்வி: மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே?

கருணாநிதி: நான் ஒப்பிட்டு பார்க்கும்போது மத்திய மந்திரி மீது இன்றைய எதிர்க்கட்சியில் உள்ள ஜெயலலிதா மற்றும் அவரது அணியில் உள்ள எல்லோருமே கோபம் காட்டி வருகிறார்கள். தங்கள் ஆதிக்கத்தில் இருந்த மதுரை மாவட்டத்தில் இன்றைய மத்திய அமைச்சர் செல்வாக்கு பெறுவதும், மாவட்டத்திற்கு தேவையான வசதிகளை, நல்ல காரியங்களை செய்வதும் எதிர்க்கட்சி கூட்டணியினரின் வெறுப்பை வெளிபடுத்துகிறது.அதனால் அவர்கள் மத்திய அமைச்சர் மீது அடிக்கடி பொய் புகார் கூறி வருகிறார்கள்.

தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே பதவியில் இருந்து ஓய்வு பெற்ற முக்கிய அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களின் உதவியை கொண்டுதான் தேர்தல் ஆணையம் இப்போது செயல்படுகிறது என்ற ஒரு பேச்சு அடிபடுகிறது. அது உண்மையாக இருக்கக் கூடாது என்பது எனது கருத்து.

கேள்வி: ஆளும் கட்சி மீது அதிகாரிகள் அதிக கெடு பிடி செய்வதாக கூறப்படுகிறதே?

கருணாநிதி: அரசியலில் மட்டுமல்ல. அதிகாரிகள் மட்டத்திலும் எட்டப்பர்கள் உண்டு.

கேள்வி: கோவையில் நேற்று நடந்த அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லையே?

கருணாநிதி: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வந்துள்ளாரே? அதுமாத்திரமல்ல. அவர் பேசும்போது தி.மு.க. குடும்ப கட்சி என்று கூறி உள்ளார். தி.மு.க. குடும்ப கட்சியாக இருக்கலாம். சந்திரபாபு நாயுடு போல குடும்பத்தை குலைத்த கட்சி அல்ல.

கேள்வி: மத்திய அமைச்சர்முக.அழகிரி மாநில அரசியலுக்கு வர ஆர்வம் காட்டுவதாக தெரிகிறதே?

கருணாநிதி: அது தாய் நாட்டின் பற்று. தமிழ்நாட்டின் மீது உள்ள பாசத்தை காட்டுகிறது. டெல்லியில் பதவியில் இருந்தாலும் அந்த பதவியை தமிழகத்திற்குதான் பயன்படுத்துகிறார்.

கேள்வி: மதுரையில் ஆளும் கட்சிக்கு எதிராக அதிக தேர்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதே?

கருணாநிதி: ஆட்சிகள் வரும். மீண்டும் திரும்பி வரும்.

கேள்வி: தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுவதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் எதிர்க் கட்சிகள் தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படுவதாக பாராட்டுகிறார்களே?

கருணாநிதி: தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக நான் கூறவில்லை. சில குறிப்புகளை தெளிவுபடுத்தினேன். எதிர் தரப்பினர் தேர்தல் ஆணையத்தை பாராட்டுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?

கேள்வி: தமிழக சட்டசபை தேர்தல் முடிவு மத்தியிலும் எதிரொலிக்குமா?

கருணாநிதி: எதிரொலிக்கும்.

கேள்வி: தி.மு.க. தேர்தல் வாக்குறுதியான மிக்சி, கிரைண்டர் அறிவிப்பு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது?

கருணாநிதி: நாங்கள் சொல்வதை மக்கள் நம்புகிறார்கள். சிலர் அதனை காப்பி அடித்து ஜெராக்ஸ் எடுத்து படித்துள்ளார்கள். அதனை எப்படி நம்புவார்கள் என்று எனக்கு தெரியாது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் புதிதாக இணைக்கப்பட வேண்டிய ஒன்று, இந்து மதத்தினர் தங்களுக்கு சொந்தமான இடத்திலோ புறம்போக்கு இடத்திலோ வழிபாட்டு தலங்கள் கட்ட சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறுவதுபோல கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தினர் வழிபாட்டு தலங்ககளை கட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று கட்டிடம் கட்டலாம் என்பதை அரசு பரிவோடு பரிசீலிக்கும்.

உலக வெப்பமயமாதல் காரணமாக ஏற்பட்டுள்ள பூலோகமாற்றம் காரணமாக சுனாமி எப்போது வேண்டுமானாலும் வரும் நிலையில் கடலோர மக்களின் உயிர், உடமைகளை பாதுகாக்கும் வகையில் அதற்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிவிக்க மீன்வளம் மற்றும் கடலியல் சம்பந்தப்பட்டகுழு அமைத்து ஆய்வு நடத்தி கடலோர மீனவர்கள் பாது காப்பு செயல் திட்டம் வகுக்கப்படும்.

ஒத்தக்கடை அருகே உள்ள யானைமலையை மத்திய அரசின் தொல்லி யல் துறை எடுத்துக் கொள்ளப்போவதாக வைகோ உள்ளிட்ட சிலர் எதிர்த்து குரல் கொடுத்தபோது அதனை இந்த அரசு மறுத்ததுடன் அப்படி ஒரு திட்டம் இல்லை என்றும், அதனை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் உறுதிபட தெரிவித்துள்ளோம்.

கேள்வி: நேற்று கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசும்போது, தேர்தல் முடிந்ததும் ஜெயலலிதா முதல்-அமைச்சராகவும், விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் இருப்பார் என்று பேசியிருக்கிறாரே?

கருணாநிதி: பண்ருட்டியை நினைக்கும்போது அவரை பற்றி மறைந்த கோவிந்தசாமி கூறியது நினைவுக்கு வருகிறது. பண்ருட்டி மாதிரி துரோகிகளை நம்பாதீர்கள் என்றார். அதனையும் மீறி நம்புவது எனது தவறு.

கேள்வி: சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் நடந்த வாகன சோதனையில் பல கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதே?

கருணாநிதி: எந்த கட்சியின் பணம் என்று அறிவிக்கப்பட வில்லையே?

கேள்வி: தமிழக வாக்காளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

கருணாநிதி: தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

கேள்வி: தமிழக தேர்தல் களம் எப்படி உள்ளது?

கருணாநிதி: எல்லாம் சரியாக உள்ளது. சில பத்திரிகைகள்தான் சரியாக இல்லை.

Wednesday, 30 March 2011

சிஎன்என்-ஐபிஎன் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு கலைஞர் கருணாநிதி அளித்துள்ள சிறப்புப் பேட்டி

சிஎன்என்-ஐபிஎன் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டி விவரம்:

கேள்வி: இந்தத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் முன் திமுக வைக்கும் கேள்விகள் என்ன?
கருணாநிதி: திமுக அரசு 1967ம் ஆண்டு முதல் இதுவரையில் ஆற்றியுள்ள சாதனைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?, இல்லையா?. நாங்கள் நம்பகமானவர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்களா?. இல்லையா?, நாங்கள் அறிவித்த திட்டங்கள், வாக்குறுதிகள் ஆகியவற்றை நிறைவேற்றியிருக்கிறோமா?, இல்லையா?. அப்படி நிறைவேற்றக் கூடிய அளவுக்கு ஆற்றலும், அறிவும் அதே நேரத்தில் அக்கறையும் உள்ளவர்கள் நாங்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்களா?, இல்லையா?. தமிழ்நாட்டில் உள்ள ஏழை-எளிய மக்களுக்கு பாடுபடுகின்ற அரசு இது என்பதை, அடித்தட்டு மக்களுக்காக உழைக்கின்ற அரசு இது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?, இல்லையா?. இத்தகைய கேள்விகளைத்தான் நான் வாக்காளப் பெருமக்களிடம் முன் வைக்க விரும்புகிறேன்.


கேள்வி: தேர்தல் அறிக்கையில் பல இலவசத் திட்டங்களை அறிவித்துள்ளீர்கள். 2006ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இலவச கலர் தொலைக் காட்சி பெட்டிகளை வழங்கினீர்கள். தற்போது லேப்-டாப், கிரைண்டர், மிக்ஸி வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறீர்கள். தேர்தலில் வெற்றித் தோல்வியை நிர்ணயிப்பது இலவச திட்டங்கள் மட்டும் தானா?
கருணாநிதி: இலவச சலுகைகள் என்பது வாக்குகளைப் பெறுவதற்காக அல்ல. ஏழை-எளிய மக்கள் தமிழகத்தில் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களை வாழ வைக்க வேண்டும் என்ற குறிக்கோள் திமுக அரசுக்கு இன்று, நேற்றல்ல- இந்த இக்கத்தை தொடங்கியதே அந்த ஏழைகளை வாழ வைப்பதற்காகத்தான். ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம் என்பது தான் எங்கள் தலைவர் அண்ணாவின் முழக்கம். எழைகளின் முகங்களிலே அந்தச் சிரிப்பைக் காண்பதற்காகத்தான் நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்ற முயற்சிகளில் இந்த இலவச திட்டங்களும் ஒன்றாகும்.

கேள்வி: கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு பற்றிய பேச்சுவார்த்தை நடந்தபோது காங்கிரசுக்கும், திமுகவிற்கும் இடையே கருத்து மாற்றங்கள் ஏற்பட்டன. தேர்தலுக்குப் பிறகும் இந்தக் கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?
கருணாநிதி: இரண்டும் அகில இந்திய அளவில் இல்லாவிட்டாலும், இந்திய அளவில் காங்கிரசும், தமிழ்நாட்டளவில் திமுகவும் பெரிய கட்சிகள் என்பதை நாங்கள் பரஸ்பரம் உணர்ந்தவர்கள். எங்களுக்கு ஒரு சில கொள்கைகள், லட்சியங்கள் இருக்கின்றன. அவைகளை நிறைவேற்றுவதற்காக எங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது. உதாரணமாக தமிழைச் செம்மொழியாக ஆக்க வேண்டும் என்பதற்காக நூற்றாண்டு காலத்திற்கு முன்பு நாங்கள் திட்டம் வகுத்து- பரிதிமாற்கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரிகள் தமிழ் செம்மொழியாகாக வேண்டுமென்பதற்காகக் குரல் கொடுத்தார்.

அந்தக் குரல் என்ன ஆகுமோ என்ற அளவுக்கு இடையில் வந்த ஆட்சியாளர்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் இருந்தபோது, சோனியா காந்தி வந்து தான் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தர அவர்களே முன்னின்று முயற்சித்து மறைந்த கல்வி அமைச்சர் அர்ஜுன் சிங் உதவியோடு தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தார்கள்.
ஆகவே நாங்கள் மாறுபடுவதாக இருந்தால், எங்களுக்கும் மத்தியிலே அமைகிற அரசுக்கும் மாறுபட்ட கொள்கைரீதியாக வித்தியாசங்கள் இருக்கலாம், அதாவது திட்டங்கள் தமிழகத்திற்கு இன்னும் நிறைய வேண்டும் என்று கருணாநிதி போராடுவதின் காரணமாக ஏற்படுகிற மாறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால் அடிப்படைக் கொள்கைகளில் எங்களுக்கும் அவர்களுக்கும் அதாவது மதவாதத்தை ஒழிப்பது, இந்தியாவில் சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவது போன்றவற்றில் நாங்கள் இருவரும் மாறுபட்டவர்கள் அல்ல.

கேள்வி: இந்த முறை திமுக தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் குறைவாக 121 இடங்களில் தான் போட்டியிடுகிறது. தேர்தலில் திமுக வென்றாலும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையப் போகிறது என்பதற்கான முன் அறிவிப்பதாக இதனை எடுத்துக் கொள்ளலாமா?
கருணாநிதி: அரசியல் மாற்றங்களைப் பொறுத்தவரையில் ஒரே கட்சியின் ஆட்சியா? அல்லது கூட்டணி ஆட்சியா? என்பதை தேர்தல் முடிந்த பிறகு தான் சொல்ல முடியும்.
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும், தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே கூட்டணி அமைத்து அந்தக் கூட்டணியில் பல கட்சிகள் இணைந்து- இடதுசாரிக் கட்சிகள், பார்வர்டு பிளாக் எல்லாம் இடம் பெற்று,அரசு அமைக்கிறார்கள்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களும் மற்றவர்களும் தமிழகத்தில் ஒரே கட்சியின் ஆட்சி நீடிக்க வேண்டுமென்று தான் கருதுவார்கள் என்று எண்ணுகிறேன். ஒரு வேளை 'வோட்டிங் பேட்டன்' (voting pattern) என்று சொல்வார்களே, அதிலே மாற்றம் ஏற்பட்டு கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் ஒரு அரசு நிலைத்திருக்க முடியும் என்ற சூழ்நிலை தோன்றினால் நாங்கள் அப்போது மற்ற கட்சிகளோடு கலந்து பேசி அதைத் தீர்மானிப்போம்.


கேள்வி: 12வது முறையாக வேட்பாளராக நீங்கள் போட்டியிடுகிறீர்கள். இந்தத் நேரத்தில் உங்கள் மகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் உங்களுடைய அரசியல் வாரிசு என்பதில் ஏதாவது கேள்விக்குறி இருக்க முடியுமா?
கருணாநிதி: எந்த கேள்விக் குறிக்கும் இடம் இல்லாமல் வளர்ந்தவர் தான் மு.க. ஸ்டாலின். நான் அரசியலில் நுழைந்து அறிஞர் அண்ணா தலைமையில் ஒரு அரசியல் கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்பவனாக இருந்து, பொருளாளராக அண்ணா அவர்களால் நியமிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த பொறுப்பை நான் எப்படி நிறைவேற்றினேனோ, அதற்கு அண்ணா காட்டிய அன்பும் என்னிடம் அவர்கள் வைத்த நம்பிக்கையும், அதற்கு கொஞ்சமும் குந்தகம் இல்லாமல் எப்படி நான் நடந்து கொண்டேனோ, அதைப் போலவே என்னுடைய தலைமையில் மு.க.ஸ்டாலின் தொண்டாற்றி வருகிறார்.

என்னிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்ற கழகத் தோழர்கள் கழகத்திலே இருக்கின்ற முன்னணியினர் பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் மு.க.ஸ்டாலினிடமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே ஸ்டாலின் மீதான நம்பிக்கை குறித்து கேள்விக் குறி எழ எந்தவித நியாயமும் இல்லை.


கேள்வி: ஸ்டாலினை அடுத்த தலைவராக திமுகவில் அனைவரும் ஏற்பார்களா?
கருணாநிதி: திராவிட முன்னேற்ற கழகம் ஒரு ஜனநாயக இயக்கம், அடுத்தது யார் என்ற கேள்விக்கு நாமே ஒருவரைப் பிடித்து வைத்து, இவர் தான் அடுத்தது என்று சொல்லக்கூடிய இயக்கம் அல்ல இது. அதாவது மடாதிபதிகள் நடத்துகின்ற மடம் அல்ல இது. மடாதிபதி என்றால், உதாரணம் சொல்ல வேண்டுமேயானால் சங்கரமடம் இருக்கிறது அல்லவா, அந்த மடத்திலே பெரியவர் சங்கராச்சாரியார் இருந்து, தனக்கு பின்னர் இவர் தான் என்று ஒருவரை அடையாளம் காட்டி விட்டு சென்றார். அதை அந்த மடத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். அதைப் போல திராவிட முன்னேற்ற கழகம் ஒரு மத ஸ்தாபனம் அல்ல. இது ஜனநாயகரீதியான ஸ்தாபனம். ஜனநாயகத்தில் தலைவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதை போல தான் இயக்கத் தோழர்கள், கழகச் செயலாளர்கள் எல்லாம் சேர்ந்து இவர் இந்தப் பொறுப்பு வகிக்க தகுதியானவர் என்று கருதினால் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

கேள்வி: நீங்கள் குடும்ப அரசியலை ஊக்குவிக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே?
கருணாநிதி: எனக்கு குடும்பம் இருப்பது தான் பெரிய தொல்லையே. என் குடும்பத்தைப் பற்றி பேசுபவர்கள், முதலில் அவர்களுக்கு குடும்பம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும். குடும்பம் நடத்துவது என்றால் திருமணமாகி ஆணும், பெண்ணும் சேர்ந்து அவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகள், அண்ணன், தம்பி இவர்கள் தான் குடும்பம் என்று அர்த்தம் அல்ல.

துணைக்கு யார்-யாரோ சேர்ந்து கொண்டு சில குடும்பங்கள் உருவாகின்றன. நான் அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. ஒரு நேர்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன்.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலில் சிபிஐ உங்கள் மகளையும், மனைவியையும் விசாரித்ததோடு கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் கணக்குகளையும் விசாரித்துள்ளது. அதனால் எதிர்க்கட்சிகள் உங்களுக்கு தெரியாமல் எதுவும் இதிலே நடைபெற்றிருக்க முடியாது என்று சொல்கிறார்கள். இதற்கு என்ன பதில் கூறுகிறீர்கள்?
கருணாநிதி:
இது ஊழலே அல்ல. இதைப் பற்றி பகிரங்கமாக எங்கள் பத்திரிகையிலே விளக்கம் வெளியிட்டுள்ளோம். கலைஞர் டி.வியில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர எனக்கு அதில் எந்தவிதமாக உரிமையும் கிடையாது. அதில் என்னுடைய மகள் (உதவியாளரிடம் விசாரித்து விட்டு) 20 சதவீதம் பங்குதாரர். என்னுடைய மனைவி தயாளு 60 சதவிகித பங்குதாரர்.

சரத்குமார் 20 சதவிகித பங்குதாரர். இந்த விவரத்தையே நான் விசாரித்து விட்டு தான் கூறுகிறேன் என்பதை நீங்கள் பார்க்கலாம். கலைஞர் டி.வி. கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதிலே பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே அதைப் பற்றி பத்திரிகைகளில் சரத்குமார் ஒரு விளக்க அறிக்கையினைத் தந்திருக்கிறார்.

அது எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது. ஒரு கடனை அடைப்பதற்காக ஒருவரிடம் கடன் பெற்றார்கள். பிறகு பெற்ற கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அதற்கான வருமான வரி தொகை எல்லாம் தரப்பட்டு அந்த ஆதாரங்களையும் காட்டியிருக்கிறார்கள். இதற்குப் பிறகு அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை.


கேள்வி: இந்த ஊழல் குற்றச்சாட்டால் திமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதா?
கருணாநிதி: சைபர், சைபர், சைபர், சைபர் என்று போட்டு இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லும் போது ''பல்லுக்கு பல் இரு காதம், பல்லிடுக்கு மூன்று காதம்'' என்று அந்த காலத்தில் பூசாரிகள் பம்பை அடிப்பார்கள். அதைக் கேட்டு இன்னொருவர் ஆமாம், ஆமாம் என்பார். மக்களும் அதை கேட்டு தலையட்டிக் கொண்டிருப்பார்கள்.

'காதம்' என்றால் பத்து மைல் தொலைவு. பல்லுக்கு பல் இரு காதம் என்றால் இருபது மைல் தூரம். பல்லிடுக்கு மூன்று காதம் என்றால் முப்பது மைல். அந்த அளவிற்கு பல்லுக்கிடையே இடைவெளி என்றால் வாய் எந்த அளவிற்கு இருக்கும் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல், ஆமாம், ஆமாம் என்று ஒப்புக் கொண்டு பூசாரி பம்மை அடிப்பதைப் போல பாமர மக்களை ஏமாற்றிட ஒரு சில அரசியல்வாதிகள் பம்பை அடிக்கிறார்கள்.

அது தான் உண்மை என்று வேறு சிலர் பம்பை அடிக்கிறார்கள். அந்த விஷயத்தைப் பற்றி நான் விரிவாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகின்ற காரணத்தால் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஊழலா, இல்லையா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது உச்ச நீதிமன்றம். அதிலே நான் தலையிட விரும்பவில்லை.

அந்த நிறுவனத்துக்கு கடனைக் கொடுத்தவர்கள் மீது வழக்கு இருக்கலாம். கடன் வாங்கிய பணம் ஊழல் பணம் என்று சொல்வது முறையல்ல. அது நீண்ட விசாரணைக்கு பிறகுதான் தெரியும்.

இவ்வாறு தனது பேட்டியில் கருணாநிதி கூறியுள்ளார்.

Monday, 21 March 2011

ஆரிய மாயை வஞ்சம் தீர்த்து விட்டதே-வைகோவுக்கு வீரமணி கடிதம்

வைகோவை ஆரிய மாயை வஞ்சம் தீர்த்து விட்டதாக கூறியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.


இதுகுறித்து வைகோவுக்கு வீரமணி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் வீரமணி கூறியிருப்பதாவது:
அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்கள் கட்சியை தொகுதிப் பங்கீடு என்ற ஒரு சாக்கைப் பயன்படுத்தி, திட்டமிட்டே வெளியேற்றியது கண்டு - தங்களுக்கும், தங்களை நம்பி தொடர்ந்து பின்பற்றும் உடன்பிறப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள அவமரியாதை கண்டு எங்கள் மனம் வேதனைப்படுகிறது.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடக்கூடிய அளவுக்கு கொள்கை லட்சிய முறையில் தந்தை பெரியார் என்ற மூல வேரிலிருந்து கிளைத்தவர்கள் அல்லவா நாம் அனைவரும்? தங்களுக்குத் தொகுதிகளைக் குறைத்துக் கொடுத்ததைவிடக் கொடுமை, தங்களை அக்கூட்டணியிலிருந்து அவமானப்படுத்தி, அதன் மூலம் ஆத்திரம் கொப்பளிக்க தாங்கள் இரவெல்லாம் பேசி முடிவு எடுக்க வைத்ததன் “ஆரிய மாயை” பற்றி எம்மைப் போன்ற - அவரை அணுஅணுவாக உணர்ந்தவர்களுக்கு இதில் வியப்போ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை. இது தங்களுக்கு என்றோ ஒரு நாள் நடைபெறும் என்பதை எதிர்பார்த்தவர்கள் நாங்கள் - விரும்பியவர்கள் அல்லர்.

வெளியிலிருந்து முதலாளித்துவ சக்திகள் தங்களை வெளியேற்ற எவ்வளவு முழு முயற்சி எடுத்துக் கொண்டுள்ளன என்கிற செய்திதான் மேலும் ஓர் அதிர்ச்சியாக உள்ளது! கடந்த காலத்தில் அந்த அம்மையாரோடு தாங்கள் ஒத்துப்போன முறை - அவர்கள் கட்சிக்காரர்கள்கூட அந்த அளவுக்குச் செய்திருக்க மாட்டார்கள் என்ற அளவு பேசப்பட்ட ஒன்று.

திருமங்கலத்தில் உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மறைந்ததால் ஏற்பட்ட இடைத் தேர்தலில், அந்த அம்மையார் தன் கட்சிக்குக் கேட்டு வாங்கி, தான் ஏதோ வெற்றியின் முகப்பில் உள்ளதாக ஒரு படம் காட்டச் செய்த முயற்சிக்கு நீங்கள் ஒத்துழைப்புத் தந்ததோடு, தமிழக சட்டமன்றத்திலும் - அ.தி.மு.க.வோடு இணைந்தே இடைத் தேர்தல் புறக்கணிப்பு, சட்டமன்ற வெளிநடப்பு போன்றவற்றிலும் ஒன்றிய நிலையிலேயே செயல்பட்டீர்கள்!

என்றாலும் ஆரியம் தனது வஞ்சத்தைத் தங்கள்மீது சமயம் பார்த்துக் காட்டி, தங்களை அழித்துவிட தனது அஸ்திரத்தை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அந்த அம்மையார் வற்புறுத்தும் கடிதமாக அவர் எழுதிய கடிதத்தின் வாசகங்கள் அமையாது, தங்களுக்கு நிரந்தர வழியனுப்பு உபசாரப் பத்திரமாகவே காட்சி அளிப்பது - “அவாளின்” இயல்பின் இலக்கணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!

அவரிடம் உள்ள அகந்தை, ஆணவம், தன்முனைப்பு இவைபற்றிக் கூறியிருக்கிறீர்கள். இது ஒன்றும் தோண்டித் துருவிக் கண்டுபிடிக்க வேண்டியவை அல்ல. அவரிடம் கூட்டுச் சேர்ந்திருந்த பா.ஜ.க. தலைவர்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியினர் முதலிய பலரும் ஏற்கெனவே பட்டு அனுபவித்தது அறிந்த செய்தியாகும்.

அவரது தற்போதைய ஆலோசகர் சோ. இராமசாமி அய்யர்களும், சுப்ரமணிய சுவாமி அய்யர்களும்தான் - அதன் இனம் இனத்தோடு என்ற உண்மைக்கேற்ப, இவர்கள் இருவருக்கும், அம்மையாருக்கும் தங்கள் கட்சி நிலைப்பாட்டில் - குறிப்பாக ஈழத் தமிழர் பிரச்சினையில் எந்த சிந்தனைப் போக்கு என்பது உலகறிந்த உண்மையல்லவா? தங்களுக்கு அம்மையார் ஆட்சியில் இழைக்கப்பட்ட “பொடா” கொடுமையை தாங்கள் அரசியல் காரணமாக மறந்திருக்கலாம்; ஆனால் இன உணர்வு, நியாய உணர்வோடு நாங்கள் என்றும் மறந்ததில்லை - சகோதர பாசம் என்பது தேவை வரும்போது பீறிட்டுக் கிளம்பும் என்பதும் இயல்பானதே!

அரசியலில் இன்னொரு தேர்தல் வரும்வரை நாங்கள் சும்மா இருப்போம் என்கிற நிலைப்பாடு சரியாக அமையுமா என்பதை சற்று நிதானமாக யோசியுங்கள். என்றைக்கிருந்தாலும் நாம் ஒரே வேரிலிருந்து கிளைத்தவர்கள் என்பதால் தாங்கள் தங்களது கட்சியின் எதிர்காலத்தைப்பற்றி சற்று உணர்ச்சி வயப்படாமல் யோசியுங்கள். அரசியல் கட்சி நடத்துவோர் ஜனநாயகத்தில் வாக்களிக்காமல் புறக்கணிப்பது நல்லதா?

சுயமரியாதை உணர்வோடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள்; என்றாலும், மேலும் தங்கள் அரசியல் பாதை எப்படி அமைந்தால் சிறப்பானதாக அமையும் என்பதற்கு தி.மு.க.வோடு ஒன்றாக இணைந்துவிட வேண்டும் என்று கூடச் சொல்ல மாட்டேன்; தனி அரசியல் கட்சியானாலும் தி.மு.க. என்ற தங்களின் தாய்க் கழகத்தின் கொள்கை, லட்சியங்களில்தான் அதிகமான ஒத்துப் போகின்ற தன்மைகள் “பளிச்சிடும்” நிலை உண்டு. அதையொட்டி தாங்கள் 2004இல் நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையாகப் பிரச்சாரம் செய்தீர்கள். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போன்றவற்றைப் பற்றி வற்புறுத்தினீர்கள்.

- இவைபோன்ற பல்வேறு பிரச்சினைகளில் நெருக்கமாக இருக்கும் ஒரே அரசியல் கட்சி, தி.மு.க.வாகவும் - அதன் தலைவருமாகத்தான் இருப்பார்கள். ஆயிரம் கோபதாபங்கள் நமக்குள் இருப்பினும் “நீரடித்து நீர் விலகாது” என்னும் பழமொழிக்கொப்ப, நாம் அனைவரும் ஓர் அணியில் நிற்க லட்சிய ரீதியான உணர்வு படைத்தவர்கள். தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கும் நிலைப்பாட்டினை எடுங்கள். எனவே, நிதானமாக யோசியுங்கள். துணிந்து ஒரு நிலைப்பாட்டினைத் தோழர்களோடு கலந்து எடுங்கள். ஆட்சிக்கு வருமுன்னரே இப்படித் தங்களை அலட்சியப்படுத்திய ஜெயலலிதா, தப்பித் தவறி வந்தால் எப்படி “விசுவரூபம்” எடுத்து அழிக்க முற்படக் கூடும் என்பதையும் எண்ணுங்கள்.

தேர்தலில் மீண்டும் (திமுக) ஆட்சிக்கு வருவது கொள்கை ரீதியாக நமக்குத் தேவையானது. உரிமையுடன் அவரிடம் ஈழப் பிரச்சினை உள்பட அனைத்துக்கும் வற்புறுத்தி வாதாடலாம், செயல்பட வைக்கலாம். வேகாத வெயிலையும் பொருட்படுத்தாது, பல மணி நேரம் நீதிமன்றங்களில் வந்து காத்திருந்த தலைவர் - தங்களை அம்மையார் “பொடா”வில் போட்டு வதைத்தபோது!

அது மட்டுமல்ல; அண்மையில்கூட அவரது ஆட்சியில் கைது செய்த நிர்ப்பந்த நிலை ஏற்பட்டபோதுகூட தங்களை சிறையில் வைத்திருப்பதை விரும்பாது, மனிதநேயத்தோடு அரசு வழக்குரைஞருக்கே சொல்லி, மறுப்புச் சொல்லாதீர்கள் என்று கூறிய மனித நேயத்தைக் கொட்டியவர். தங்களுக்குரிய மரியாதையை இந்த அணியில் எப்போதும் நீங்கள்பெற முடியும்.

நாம் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்பதால் நம் தமிழினம் உலகம் முழுவதும் உரிமைக் களத்தினில் வெற்றி பெற உதவிடும். இது வெறும் அரசியல் வியூகம் அல்ல - நல்லெண்ணத்தோடும், கவலையோடும் ஒரு சகோதரரின் அறிவுப்பூர்வமான வேண்டுகோள். எந்த உள்நோக்கமோ, அரசியல் லாபங்களைக் கருதியோ அல்ல - இந்த வேண்டுகோள். மனதிற்பட்டது - தங்களது மனப் புண்ணுக்கு மருந்து என்று கருதியே இந்த யோசனை. பகுத்தறிவாளர்களாகிய நாம் தொலைநோக்குப் பார்வையோடும் சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள்
என்பதால்தான் இந்த வேண்டுகோள் என்று அவர் கூறியுள்ளார்.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...