Monday, 10 January, 2011

சாருவின் வலை தளத்தில் மீண்டும் கேள்வி-பதில் பகுதி ஆரம்பம். (3)

நண்பர்களே நான் முன்னர் கேட்ட கேள்விகளுக்கு சாரு பதில் அளித்து உள்ளார்.

பதில்கள் அமர்க்களம். என்னால் கார்த்திக்கு செய்து  கொடுத்த  சத்தியத்தை  மீறிவிட்டராம் சாரு.

பதில் தருகிறாரா  அல்லது வாரி விடுகிறாரா  என்றே தெரியவில்லை. நீங்கள் தான் சொல்லவேண்டும்.

பதில்கள் கீழே.

1.நீங்கள் கேட்பது போல் ’அராத்து ஏன் ட்விட்டரில் யாரையும் ஃபாலோ பண்ணுவதில்லை’ என்பது போன்ற உப்புசப்பில்லாத கேள்விகளை நான் அவரிடமோ அவர் என்னிடமோ கேட்பதில்லை.  நாங்கள் இருவரும் சேர்ந்தால் எந்த ஃபிகரை ஃபாலோ பண்ணுவது, படியுமா படியாதா என்பது போன்ற சீரியஸான விஷயங்களையே விவாதிப்போம். விவாதத்தோடு நிறுத்தி விடுவதில்லை.  காரியத்திலும் இறங்குவோம்.  அதன்படி புத்தாண்டு அன்று அவர் ஒரு ஃபிகரை மடக்க, நான் சுமார் 100 ஃபிகர்களோடு நடனம் ஆடினேன்.  (மேல் விபரங்களுக்கு வரும் பொங்கல் இதழ் சூரிய கதிரை பார்க்கவும்).
மேலும், நாங்கள் எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊர் பற்றிய ஃபீல்ட் ஒர்க்கிலும் இறங்குவோம்.  ஃபீல்ட் ஒர்க் என்பது அந்த ஊர் பெண்கள் பற்றிய கள ஆய்வு எனக் கொள்க.

2.கேள்வி தப்பு.  சினிமா கலைஞர்களுக்குத்தான் ரசிகர் மன்றம் என்று சொல்வது.  எழுத்தாளர்களுக்கு அமைக்கப்படும் ரசிகர் மன்றங்களை வாசகர் வட்டம் என அழைக்கின்றனர்.  சமீபத்தில் ஜெயமோகனின் ரசிகர்கள் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் என்ற ரசிகர் மன்றம் ஒன்றை அமைத்து மணி ரத்னத்தையெல்லாம் கூப்பிட்டு அதகளம் பண்ணியிருக்கின்றனர்.  இதைப் பார்த்து பொறாமை கொண்ட என் ரசிகர்கள் சாரு ரசிகர் மன்றத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கூடிக் கூடிப் பேசி குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  சாரு வாசகர் வட்டம் என்று வைக்கலாமா என்று என்னைக் கேட்டதற்கு, விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் என்ற பெயரில் உள்ள ‘பெப்’ இல்லை என்று சொல்லி மறுத்து விட்டேன். ஸீரோ டிகிரி வாசகர் வட்டம் என்று வைக்கலாமா என்று என் ரசிகர் மன்றத்தின் கொ.ப.செ. கேட்டார்.  வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.  ஒன்று, போயும் போயும் ஜெயமோகனைக் காப்பி அடித்த மாதிரி ஆகி விடும்.  இரண்டாவது, அந்தப் பெயரில் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் என்ற பெயரில் உள்ள லயம் இல்லை.  பெயர் வைப்பதில்தான் குழப்பமே ஒழிய வாசகர் வட்டம் உறுதியாகி விட்டது.  ஆகஸ்ட் மாதம் காமராஜர் அரங்கில் துவக்க விழா.  சினிமா நண்பர்கள் யாரையும் கூப்பிடலாமா என்று கேட்டேன்.  அதைவிட பாம்புப் பிடாரனைக் கூப்பிட்டு அரங்கில் நாலைந்து பாம்புகளை விடலாம் என்றார் வாசகர் வட்டத்தின் துணைச் செயலாளர் ஞான பாஸ்கர். ஆனால் நடிகை ஸ்ரேயா வருவது மட்டும் உறுதியாகி விட்டது. குஷ்புவைப் போல் வராமல் போய் விட்டால் என்ன செய்வது என்று ஒரு பிரச்சினை எழுப்பப்பட்டு அதை விவாதிப்பதிலேயே நான்கு பாட்டில் ரெமி மார்ட்டின் காலி.  ஆனாலும் ஸ்ரேயாவை விட வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.  “நீங்களே ஸ்ரேயாவை விடப் பெரிய ஆள்தானே சாரு? ஸ்ரேயா எதற்கு?” என்று கடுமையாக வாதிட்டார் வாசகர் வட்டத்தின் நாகூர் வட்டச் செயலாளர் தர்மசேனன்.  இருந்தாலும் போர்ஹேஸுக்குப் பிடித்த எழுத்து துப்பறியும் கதைகள் என்பது போல் எனக்கு ஸ்ரேயாவைப் பிடிக்கிறதே என்று வாதிட்டு வைத்திருக்கிறேன்.  போர்ஹேஸ் விஷயத்தில் நான் சொல்வது உண்மையா இல்லையா என்பதை அறிந்து கொள்ள சில ரசிகர்கள் எஸ். ராமகிருஷ்ணனை அணுகியிருக்கின்றனர்.  அவர் என் நண்பர் என்பதால் எனக்கு சாதகமான பதிலையே கொடுப்பார் என்று நம்புகிறேன்.
இதற்கிடையில் அராத்து வேறு குறுக்கே புகுந்து “ஏம்ப்பா உருப்படாத பயல்களாக இருக்கிறீர்கள்?  விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னமே சாருவுக்கு ஆரம்பித்திருக்கலாமே; எல்லாம் இந்த உயிர்மையால் வந்தது; மேற்கைப் பாருங்கள், கிழக்கைப் பாருங்கள்” என்று சத்தம் போடுகிறார்.
விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் முக்கிய ரசிகராக கமல்ஹாசன் சேர்ந்திருப்பதால் சாரு வாசகர் வட்டத்துக்கு ரஜினியை இழுக்கலாமா என்ற முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது.  தேவையில்லை; ஸ்ரேயா மற்றும் லட்சுமி ராய் இருவருமே போதும்.  வேண்டுமானால் ஸீரோ டிகிரி ஆங்கில மொழிபெயர்ப்பை வைத்து பாலிவுட்டிலிருந்து சில நடிகைகளை இழுக்கப் பாருங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.  நமக்கு எதற்கு நடிகர்கள்?  நடிகைகள் போதுமே?
எஸ். ராமகிருஷ்ணனைப் பொறுத்தவரை அவர் இது போன்ற ரசிகர் மன்றங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்.  நேற்று புத்தகக் கண்காட்சியில் அவர் பேசிக் கொண்டிருக்க அவரைச் சுற்றி சுமார் 20 இளைஞர்கள் அவர் பேசுவதையே வாய் பிளக்கக் கேட்டுக் கொண்டிருந்தனர்.  என் ஞாபகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய ஏதென்ஸுக்குப் போய் விட்டது.  இப்படித்தானே சாக்ரடீஸின் பின்னே அன்றைய கிரேக்க இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர் என்று பூரிப்புடன் நினைத்துக் கொண்டேன்.

3. என் எழுத்தை அவந்திகா படிப்பாள் என்ற உங்களுடைய நம்பிக்கையைக் கண்டு வியக்கிறேன்.  தெரியவில்லை.  கேட்டதில்லை.  பிடித்தால் காமரூப கதைகளும், தேகம் நாவலும் அவளுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
கார்த்திக்குக்கு தமிழ் படிக்கத் தெரியுமா தெரியாதா என்று எனக்குத் தெரியவில்லை.  கப்பலிலிருந்து வந்தால் கேட்டுச் சொல்கிறேன்.  அப்படியே தெரிந்தாலும் அவன் நம்முடைய இயக்குனர் அமீர் மாதிரி.  தினமும் பேப்பர் படித்தாலே கண்களில் பூச்சி பூச்சியாகப் பறக்கிறது என்று அலுத்துக் கொள்வான்.  பாருங்கள், உங்கள் கேள்வியால் நான் அவனுக்குக் கொடுத்த சத்தியத்தை மீறி விட்டேன்.  இனிமேல் என்னைப் பற்றி எதுவுமே எழுதக் கூடாது என்று சொல்லி என்னிடம் சத்தியம் வாங்கியிருந்தான் அவன். சத்தியத்தை மீறி விட்டேன்.  ஆனால் மீறுவதற்காகத்தானே சத்தியங்கள் செய்யப்படுகின்றன?

No comments:

Post a Comment

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...