Monday, 4 July 2011

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தமிழ் ஈழக் கொடியுடன் ஓடிய தமிழர்.

லண்டன்: இலங்கையின் தமிழ் இனப்படுகொலையை உலகுக்கு உணர்த்தும் வகையிலும், அதைக் கண்டிக்கும் வகையிலும், உலக நாடுகள் இலங்கையின் இனப்படுகொலை குறித்து நடவடிக்கை எடுக்கும் வகையிலும், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தமிழ் ஈழக் கொடியை அசைத்தபடி ஒரு தமிழர் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.





இலங்கை கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதற்கு அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து போராட்டங்களில் குதித்துள்ளனர்.


ஞாயிற்றுக்கிழமை நடந்த 3வது ஒரு நாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. அப்போது இலங்கையைக் கண்டித்து தமிழர்கள் லார்ட்ஸ் மைதானத்தில் திரண்டிருந்தனர். இதனால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.


பெரும் திரளாக கூடியிருந்த தமிழர்கள், இலங்கையின் இனப்படுகொலையை விளக்கும் பதாகைகளை ஏந்தியபடியும், தமிழ் ஈழக் கொடிகளை பிடித்தபடியும் நின்றிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

ஈழத் தமிழர்களின் இந்தப் போராட்டத்திற்கு பெரும் ஆதரவும், வரவேற்பும் கிடைத்தது. பலரும் தமிழர்களிடம் நின்று விசாரித்து பிரச்சினையை கேட்டறிந்தனர்.

இந்த நிலையில் திடீரென ஒரு தமிழ் இளைஞர் லார்ட்ஸ் மைதானத்திற்குள் தமிழ் ஈழக் கொடியை வானில் அசைத்தபடி ஓடத் தொடங்கினார். இதை எதிர்பார்க்காத பாதுகாவலர்கள் அவரைப் பிடிக்க ஓடினர். ஆனால் அவரோ டேக்கா கொடுத்தபடி மைதானத்தை ஒரு சுற்று சுற்றி ஓடி வந்தார். தமிழ் ஈழக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி அந்தத் தமிழர் ஓடியதால் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது இங்கிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்தது. இலங்கையின் லசித் மலிங்கா பந்து வீசிக் கொண்டிருந்தார். 46வது ஓவர் வீசப்பட்டுக் கொண்டிருந்தது. இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு இடையே புகுந்து அவர் ஓடியபோது அவரைப் பார்த்து இலங்கை வீரர்கள் அமைதியாக நின்றனர். அந்தத் தமிழரோ, இலங்கை வீரர்கள் மீது தனது நிழல் கூட படாத வகையில் ஓடினார்.

பின்னர் அந்தத் தமிழ் இளைஞரை எம்.சி.சி பெவிலியன் முன்பு வைத்து பாதுகாவலர்கள் பிடித்து அங்கிருந்து கொண்டு சென்றனர்.

அந்தத் தமிழர் ஈழக் கொடியுடன் ஓடியபோது மைதானத்தில் கூடியிருந்த பலரும் உற்சாகத்துடன் குரல் எழுப்பிக் கை தட்டியது குறிப்பிடத்தக்கது.

போட்டியைக் காண இலங்கைக்கான துணைத் தூதர் அம்சாவும் லார்ட்ஸ் வந்திருந்தார். இந்த சம்பவத்தால் பேயறைந்தது போலாகி விட்டது அவரது முகம். உடனடியாக அவர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் அவர் புகார் கொடுத்தார்.

நன்றி: தட்ஸ்தமிழ் 

1 comment:

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...