திருவண்ணாமலை: தனது 34வது பிறந்த தினத்தையொட்டி திருவண்ணாமலை கோவிலுக்கும் தனது ஆசிரமத்துக்கும் வந்த 'குஜால்' சாமியார் நித்யானந்தாவுக்கு எதி்ர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதனால் கோவிலில் இருந்து வெளியேறுவதிலும், ஆசிரமத்துக்கு செல்வதிலும் அவருக்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டது. போலீஸார் மற்றும் பக்தர்களின் பாதுகாப்புடன் அவர் பத்திரமாக ஆசிரமம் போய்ச் சேர்ந்தார்.
ஆண்டுதோறும் தனது பிறந்த நாள் விழாவை திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள தனது ஆசிரமத்தில் நித்யானந்தா கொண்டாடுவது வழக்கம்.
மேலும் பிறந்த நாளன்று அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அவர் சிறப்பு பூஜைகள் செய்வதும் வழக்கம்.
இதற்காக இன்று காலை 4.30 மணிக்கு அவர் பெங்களூரிலிருந்து திருவண்ணாமலை வந்தார். அவருடன் சுமார் 1,000 சீடர்கள் கார், வேன், பஸ்களில் வந்தனர். அவரது வருகையையொட்டி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
காலை 4.50 மணிக்கு அம்மனி அம்மன் கோபுரம் வழியாக திருவண்ணாமலை கோவிலுக்குள் செல்ல முயன்ற நித்யானந்தாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையடுத்து அவர் ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். கோவிலில் அருணாச்சலேஸ்வரருக்கு நடந்த சிறப்பு அபிஷேக ஆராதனையில் பங்கேற்றார்.
பினனர் உண்ணாமலையம்மன் சன்னிதி, நவகிரக சன்னதிக்குச் சென்ற நித்யானந்தா கோவில் பிரகாரத்தில் உள்ள அருணகிரிநாதர் சன்னிதி முன் அவரது சீடர்கள் நடத்திய சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.
தொடர்ந்து அங்கு தியானத்தில் ஈடுபட்ட அவர் திடீரென கண் கலங்கினார்.
அதன் பின்னர் கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி விபூதி, குங்குமம் தந்தார். அவர் மிக நீண்ட நேரம் அங்கேயே அமரவே, அவரைப் பார்க்க பெரும் கூட்டம் கூடிவிட்டது. இதையடுத்து அவரை போலீசார் வெளியேறுமாறு கூறினர்.
இதையடுத்து காலை 7 மணிக்கு திருமஞ்சன கோபுரம் வழியாக கோவிலை விட்டு வெளியே வந்த நித்யானந்தா கிரிவல பாதையில் உள்ள தனது நித்யானந்தா தியானபீட ஆசிரமத்துக்கு கிளம்பினார்.
ஆனால், நித்தியானந்தாவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைப்பினர் அங்கு கறுப்பு கொடிகளுடன் கூடி நின்று கோஷமிட்டனர்.
பிரச்சனையாகிவிடும் என்ற அச்சத்தால் மீண்டும் நித்தானந்தா கோவிலுக்குள் சென்று திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்தார்.
அங்கிருந்து காரில் தனது ஆசிரமத்துக்குப் புறப்பட்டார். அவரது காருக்குப் பின் சீடர்கள் கார், வேன்களில் வந்தனர்.
செங்கம் சாலை வழியாக சென்ற அவருக்கு மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைப்பினர் மீண்டும் கறுப்பு கொடி காட்டி கோஷமிட்டனர்.
சாலையை அவர்கள் மறித்தபடி நின்றதால் நித்யானந்தாவின் கார் திருப்பப்பட்டு வேலூர், காஞ்சி சாலைகள் வழியாக ஒருவழியாக ஆசிரமத்தை அடைந்தது.
தனது ஆசிரமத்தில் இன்று மாலை அவர் 1008 லிங்கங்களுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்துகிறார். பின்னர் 'ஜீவன்முக்த சமுதாயம்' செய்வோம் என்ற தலைப்பில் தியான சத்சங்கம் நடத்துகிறார்.
இதில் பங்கேற்க ஆயிரகக்கணக்கில் அவரது சீடர்கள் குவிந்துள்ளனர்.
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்(http://thatstamil.oneindia.in/news/2010/12/29/nithyanantha-chased-agitators-tiruvannamalai.html)
No comments:
Post a Comment
என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.